articles

img

ஒன்றிய பாஜக அரசு கூட்டுறவுகளை காப்பாற்றுமா?

சமீபத்தில் “கூட்டுறவு” பற்றி இரண்டு செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஒன்று, ஒன்றிய அரசு கூட்டுறவுக்கென்று உருவாக்கி உள்ள தனி அமைச்சகம்; மற்றொன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2012-ல் ஏற்படுத்தப்பட்ட 97-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை பற்றியதாகும்.இந்திய விடுதலையின்போது கூட்டுறவு சட்டம் என்பது1904, 1912 மற்றும் 1926ல் உருவாக்கப்பட்ட மத்திய சட்டங்களின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் செயல்பட்டு வந்தது. விடுதலைக்குப் பிறகு `கூட்டுறவு’ மாநிலங்களின் பட்டியலில் 32வது இனமாக 7வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. 1957க்கு பிறகுதான் மாநிலங்கள் தங்கள்மாநில கூட்டுறவு  சட்டங்களை உருவாக்கின. மாநிலங்களில் தனி கூட்டுறவு அமைச்சகமும் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் கூட்டுறவுச் சட்டம் 1961ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது.

97வது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடைசி சில ஆண்டுகளுக்கு முன்னதாக 2011ஆம் ஆண்டு கூட்டுறவு பற்றிய விரிவான விளக்கங்களை அரசமைப்புச் சட்டத்தில் உருவாக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டு இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2012 பிப்ரவரியில் அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்கான காரணங்களை அப்போதைய ஒன்றிய அரசு கூறும்போது, கூட்டுறவு அமைப்புகளின் குறைகள் அல்லது பலவீனமான தன்மை (Weakness) கூட்டுறவு சங்க உறுப்பினர்களை பாதுகாப்பதாக இல்லை என்றும், கூட்டுறவு அமைப்புகளின் நோக்கங்களை நிறைவேற்றவில்லை என்றும் கூறியது. இதற்கான காரணங்களாக, காலம் கடந்த தேர்தல்கள், கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுக்களில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அமைப்பது, நிர்வாகக் குழுக்களை கலைத்துவிட்டு அரசு அதிகாரிகளிடத்தில் நிர்வாகத்தை நீண்ட காலத்திற்கு ஒப்படைத்து கூட்டுறவின் ஜனநாயகத் தன்மையை காக்காமல் இருப்பது, சங்கத்தின் நிர்வாகக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது (Lack of accountability), பல கூட்டுறவு அமைப்புகளில் கூட்டுறவு நிர்வாகத்தில் திறமையற்று இருப்பது(Lack of Professionalism) போன்றவை கூறப்பட்டன. இந்த திருத்தம் கூட்டுறவில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டிய அவசியம் பற்றியும் ஒன்றிய அரசு பேசியது. இக்கூட்டுறவு நிறுவனங்களை வலுவானதாக்க இந்நிறுவனங்களின் சுயேச்சையான தன்மையும், ஜனநாயக செயல்பாடும் நிர்வாகத்தில் மற்ற அமைப்புகளைப் போன்ற திறமையான செயல்பாடும் தேவை என்று ஒன்றிய அரசு கூறியது.

மேற்கூறிய காரணங்கள் முன்னதாக ஒன்றிய அரசு கூட்டுறவு பற்றி அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் பரிந்துரையே ஆகும். கடைசியாக 2004-ல் பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையும் இதுவே ஆகும். இக்குழு குறுகியகால கூட்டுறவு அமைப்புகளுக்கு மறு முதலீட்டு நிதி ரூ.15000 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த மறு முதலீட்டு நிதியை பெற மாநிலங்கள் மாநில அரசுகள் தங்கள் மாநில கூட்டுறவுச் சட்டங்களில் உரிய திருத்தம் கொண்டுவரவேண்டும் என்றும், இதற்கான மாநில கூட்டுறவுச் சட்ட வரைவும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்நிதியைப் பெற மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவேண்டும் என்றும், இந்த சட்டத்திருத்தநிபந்தனைகளை ஏற்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த மறு முதலீட்டு நிதிபெற்ற 25 மாநிலங்களில் பல மாநிலங்களில் கூட்டுறவுச் சட்டம் திருத்தப்பட்டது. தமிழகத்தில் கூட்டுறவுச் சட்டத்திற்கான திருத்தம் 2008-2009 கால கட்டத்தில் உருவாக்கப்பட்டதை நாம் நினைவுகூர வேண்டும்.எனினும் ஒன்றிய அரசு அனைத்து மாநில அரசுகளும்சில முக்கிய முடிவுகளை அமலாக்கம் செய்ய, கூட்டுறவுஎன்பது, அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெறவேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு நினைத்தது. இதன்படி `கூட்டுறவு சங்கங்கள்’ என்ற வார்த்தை அடிப்படை உரிமைகள் சட்டப்பிரிவு 19(1)(C)ன் கீழ் சேர்க்கப்பட்டது.

`Fundamental right to form association or union tocover Co-operative Societies’ என்று, கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கம் அடிப்படை உரிமையாக்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தின் மற்றொரு பகுதியான அரசுக் கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles to State Policy)- என்பதில் 43B பிரிவாக மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்களின் சுயேச்சையான செயல்பாட்டுக்கும், ஜனநாயக நடைமுறைக்கும் நிர்வாகத் திறமையை உருவாக்கவும், மாநிலங்கள் சட்ட
மியற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

திருத்தங்களை மறுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு
தற்போது வந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த 97வது சட்டத்திருத்தம் செல்லாது என்று 2012இல் வழக்கு தொடரப்பட்டது. 2013வாக்கில் இந்த சட்டத்திருத்தத்தின் பிரிவு IXB செல்லாதுஎன்று தீர்ப்பளித்தது. இதற்கு குஜராத் நீதிமன்றம்இரண்டு காரணங்களைக் கூறியது. ஒன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படவேண்டும். மேலும் இந்த சட்டத் திருத்தத்தை பாதிக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும். இந்த நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை என்பதால் இந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.

தற்போதுள்ள 97வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் IXB திருத்தம் ஒன்றிய அரசின் பன்மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 2002ன் பலன், பன்மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் செயல்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். மாநில அரசின்கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாட்டில் ஒன்றிய அரசு சட்டமியற்றவோ, தலையீடு செய்யவோ முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகின்றது.இந்தத் தீர்ப்பை மூன்று பேர் அடங்கிய அமர்வில் ரோஹின்டன் நாரிமன், பி.ஆர்.கவாய் ஆகிய இரண்டு நீதிபதிகள்,  பிரிவு IXB திருத்தம் மாநில அளவில் இயங்கும்கூட்டுறவு சங்கங்களை கட்டுப்படுத்தாது என்று கூறினர். இதுவே இறுதித் தீர்ப்பாகவும் வந்தது. எனினும் ஒன்றிய அரசு ஒரு சட்டமியற்றி அதை 50% மாநிலங்கள் ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக்கப்படும். கூட்டுறவு மாநிலபட்டியலில் இருந்தாலும் இது சாத்தியமாகும். தற்போது இந்த திருத்தம் அவ்வாறு 50% மாநிலங்களில் ஒப்புதல் பெறாத காரணத்தால் உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின்
மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த பின்னணியில் தற்போதுள்ள ஒன்றிய பாஜகஅரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால், அதாவது பங்குபெறும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவும், 28 மாநிலங்களில் 18-ல் பாஜகவுக்கு ஆதரவு உள்ளதாலும் இச்சட்டத்திருத்தத்தை மீண்டும்கொண்டுவர இயலும். மேற்கூறிய நடைமுறையை ஒன்றிய அரசுநடைமுறைப்படுத்தி கூட்டுறவுகளின் செயல்பாட்டை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் வாய்ப்பு தற்போதும் உள்ளது.இந்நிலையில்தான் ஒன்றிய அரசு கூட்டுறவுக்கு என்றுதனி அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தற்போது அகில இந்திய கூட்டுறவு அமைப்புகளையும், பன்மாநில கூட்டுறவு அமைப்புகளையும் மட்டுமே தங்கள்செயல்பாட்டில் வைக்க முடியும்.

இந்த அமைச்சகத்திற்கு பொறுப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா,  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மேலும் அனைவராலும் உற்றுநோக்கக் கூடியதாக உள்ளது.33 மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகள், 356 மாவட்டமத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 1539 நகரக் கூட்டுறவு வங்கிகளில் சுமார் ரூ.13 லட்சம் கோடி வைப்புநிதி உள்ளது.நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 கோடிப் பேர்ஏதாவது ஒரு கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ளனர்.மூன்றாண்டுகளுக்கு முன்பாக பாரத ரிசர்வ் வங்கி 50 கோடி வைப்பு கொண்ட நகர வங்கிகளை சிறு நிதி நிறுவனவங்கிகளாகவும் (Small Finance Bank) 2000 கோடி வைப்புகளை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளை தனியார் வங்கிகளாகவும் மாற்றவேண்டும் என்று காந்தி என்றஅதிகாரி தலைமையில் ஏற்படுத்தப்பட்ட குழு பரிந்துரைசெய்துள்ளது. இதுவே பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கையாகவும் ஆக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 2020 ஜூன் மாதம் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு பிரிவு 3, 45 மற்றும் 56வது திருத்தங்கள் கொண்டு வந்து கூட்டுறவு நகர வங்கிகள், மாவட்டமத்திய கூட்டுறவு வங்கிகள், தலைமைக் கூட்டுறவு வங்கிஆகியவற்றின் செயல்பாட்டுக்கான புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் இந்த திருத்தங்களும், இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுத்த முடியாத நிலையே ஏற்படும். எனவே கூட்டுறவுஅமைப்புகளை மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து நீட்டிக்க ஒன்றிய அரசின் கொள்கைகளில்மாற்றம் ஏற்பட்டாகவேண்டும். இந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)அரசு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசு அல்ல. ஒன்றியஅரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே கூட்டுறவுகள் காப்பாற்றப்படும்.

கட்டுரையாளர் :  தி.தமிழரசு, தலைவர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு

;